அமித்ஷா எவ்வளவோ சொல்லியும் இபிஎஸ் கேட்கவில்லை - ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்
அமித்ஷா சொன்ன வாய்ப்புகளுக்கு ஒப்புக்கொண்டிருந்தால் அதிமுக இன்றைக்கு ஆளுங்கட்சி என ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக யாரால் உருவாக்கி நிறுவி காப்பாற்றப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி மனசாட்சியுடன் நினைக்க வேண்டும்.
அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் ஏற்பின் மூலமே பொதுச் செயலாளர் தேர்வு இருக்க வேண்டும் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது. ஜெயலலிதா அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். எந்த சட்டத்தை திருத்தக் கூடாது என்று இருந்ததோ அந்த விதியை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
அமித்ஷா
செங்கோட்டையன் இப்போது எடப்பாடி பழனிசாமி உடன் தான் உள்ளார். கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என நினைப்பவர் செங்கோட்டையன். நான் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக நான், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா ஆகியோர் சென்னையில் வைத்து ஆலோசனை நடத்தினோம். அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவு தான் இன்றைக்கு அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.
மத்திய அரசின் உளவுத்துறை 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளே வெல்லும் என்று கூறியதை புள்ளி விவரத்துடன் அமித்ஷா சொன்னார். அதை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி 150 தொகுதிகள் வரை வெல்வோம் எனக் கூறினார்.
டிடிவி தினகரன்
2019 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, தென் மாவட்டங்களில் 14 தொகுதிகளில் தலா ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கியிருந்தது. சட்டப்பேரவை வாரியாக 80க்கு மேற்பட்ட தொகுதிகளில் தலா 26,000 வாக்குகள் வாங்கியது அமமுக. இதனை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என நானும் அமித்ஷாவும் கூறினோம்.
விருப்பமில்லை என்றால், பாஜகவுக்கு 20 தொகுதிகளில் கூடுதலாக கொடுங்கள், பாஜக அமமுகவுக்கு அதை கொடுக்கும் என கூறினார் அமித்ஷா. நான் சொன்னால் டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்வார்.
ஆனால், அமமுகவுக்கு 10 வாரிய தலைவர் பதவிகளை கொடுக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். எதற்குமே எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. அமித்ஷா சொன்ன வாய்ப்புகளுக்கு ஒப்புக்கொண்டிருந்தால் அதிமுக இன்றைக்கு ஆளுங்கட்சி" என கூறினார்.