அதிமுக இரட்டை இலை விவகாரம் - நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்
இரட்டை இலை விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரட்டை இலை விவகாரம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து, ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
விசாரணைக்கு தடை
அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.
இந்த வழக்கில், அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வது என அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. கட்சியில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு உள்ளது" என்ற வாதத்தை முன்வைத்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு
ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை இருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனவே இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) தீர்ப்பு அளித்தனர். கட்சியின் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு இதை விசாரிக்க அனுமதி இல்லை எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.