துரோகியை மக்கள் நம்ப தயாராக இல்லை; அதிமுக ஆட்சி அமைக்க முடியாது - ஓபிஎஸ் விமர்சனம்

J Jayalalithaa O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Karthikraja Oct 18, 2024 07:05 AM GMT
Report

 அதிமுக ஒன்றிணைய பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருந்தார். 

edappadi palanisamy

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதிமுக இணைவை தடுக்கவே திமுக இதை செய்துள்ளது - ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக இணைவை தடுக்கவே திமுக இதை செய்துள்ளது - ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓபிஎஸ் பதிலடி

இந்த அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவங்கப்பட்ட அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்து. சத்துணவுத் திட்டம், எனப் பல்வேறு சாதனைகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு, 4 முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைத்து, தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விலையில்லா அரிசி எனப் பல்வேறு சாதனை படைத்தார்கள். 

o panner selvam

நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவை 3 வது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களைச் சாரும். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தேர்தலில் படுதோல்வி

அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த  அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. 7 மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுக சந்தித்தது. 

இதன்மூலம், முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது இந்தத் துரோகச் செயல் காரணமாக, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது.

இப்படிப்பட்ட "துரோகம்" தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

தலைமைக்கு பண்புள்ளவர்

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன்தெரி வார்." அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும், பண்புள்ளவர்கள் அதைப் பனை அளவுக்குக் கருதிக் கொள்வார்கள் என்கிறது திருக்குறள். அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்.

இந்தத் தருணத்தில், "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மதற்கு" என்ற வள்ளுவரின் வாய்மொழியினைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது, எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.  

எனவே, "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம்.