இரவில் நடைபெற்ற மீட்டிங் - உறுதியானதா கூட்டணி..? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
நேற்று இரவு ஓபிஎஸ் அணி மற்றும் தமிழக பாஜகவினர் நேரில் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓபிஎஸ் - பாஜக
பிரதமர் மோடியை புகழ்ந்து வரும் ஓபிஎஸ், தொடர்ந்து தாங்கள் பாஜகவின் கூட்டணியில் தான் நீடிப்பதாக தொடர்ந்து தெரிவித்த வண்ணமே இருந்தார்.
நேற்று அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கபட்டது. அந்த அணி தரப்பில் தேர்தலில் களமிறங்க 414 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதே போல பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜகவினர் நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது பாஜக தரப்பில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி, விகே சிங் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எந்தப் பிரச்சனையும்
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசும் போது, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் எங்கள் கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்தனர் என்றும் எங்கள் விருப்ப தொகுதிகளின் பட்டியலை பாஜகவிடம் அளித்துள்ளோம் என்றார்.
மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து பிறகு தெரிவிப்பதாக பாஜக கூறியுள்ளதாக தெரிவித்த ஓபிஎஸ், எந்தப் பிரச்சனையும் இன்றி தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக குறிப்பட்டார்.