அரசு வேலைவாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றவேயில்லை - ஓபிஎஸ் கண்டனம்
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் அறிக்கை
அந்த அறிக்கையில்,
"அரசுத் துறைகளில் 5.50 இலட்சம் வேலைவாய்ப்புகள்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, “2026 ஜனவரி மாதத்திற்குள் 75,000 பேருக்கு அரசு வேலை” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்திருப்பதன் மூலம், இந்தத் தேர்தல் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது நிருபிக்கப்பட்டு இருக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட விதி 110-ன்-கீழான அறிக்கையில், கடந்த மூன்றாண்டுகளில் 32,714 பேருக்கு பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்புகள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 32,709 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதன்படி பார்த்தால், சொன்ன வாக்குறுதியில் 12 விழுக்காடு மட்டுமே மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பல வேலைவாய்ப்புகள் ஒப்பந்த அடிப்படையிலும், வெளிமுகமை மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகின்ற நிலையில், இவற்றையெல்லாம் சேர்த்து 65,483 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றால், இதனை வேலையில்லாத் திண்டாட்டத்திற்கான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எத்தனை பேர்?
கடந்த மூன்று ஆண்டுகளில் 65,483 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று சொன்னால் போதாது. இவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, பத்திரிகை விளம்பரம் மூலம் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை, வெளிமுகமை மூலம் பணியமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை போன்றவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு, முறையான சம்பள விகிதத்தில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? தொகுப்பூதியத்தில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? போன்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கையில் எந்தவிதத் தெளிவும் காணப்படவில்லை. மூன்று ஆண்டுகளில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பியிருக்க வேண்டிய நிலையில், வெறும் 65,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று சொல்வது தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினையும், திறமையின்மையையும், அக்கறையின்மையையும் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
அரசு வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் pic.twitter.com/HpCdI89w8i
— O Panneerselvam (@OfficeOfOPS) June 27, 2024
அடுத்தபடியாக, தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கை வைத்துக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் 77 இலட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேறி மீண்டும் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் இருக்கின்றன. மேலும், தற்போது சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் தொழிலாளர் வைப்பு நிதி துவங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தவிர, நிறுவனங்களின் தலைமையிடத்தை வைத்தும் வைப்பு நிதிக் கணக்குகள் துவக்கப்படுவதால், இங்கு பணிபுரிகின்றவர்களுக்கு பிற மாநிலங்களிலும், பிற மாநிலங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு தமிழ்நாட்டிலும் வைப்பு நிதி கணக்குகள் துவக்கப்படுகின்றன. ஆட்சியில் யார் இருந்தாலும், இவையெல்லாம் வழக்கம்போல் நடைபெற்று வருபவை. எனவே, இதனை ஓர் அளவுகோலாக வைத்துக் கொண்டு, இது தமிழ்நாடு அரசின் சாதனை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தனியார் துறையில் வேலைவாய்ப்பு என்பது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் கிடைப்பது. மேலும், இவையெல்லாம் இளைஞர்கள் தாங்களாக விண்ணப்பித்து தகுதியின் அடிப்படையில் பெறுபவை. இதனை மாநில அரசின் சாதனை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அரசு காலிப் பணியிடங்கள் எந்த அளவுக்கு நிரப்பப்பட்டன என்பதுதான் கேள்வி?
எதிர்பார்ப்பாக இருக்கிறது
தொழில் வளம் நிறைந்த தமிழகத்தை உருவாக்கவும், அதன் வழியே நம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக கூறும் முதலமைச்சர், “தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்" என்ற வாக்குறுதியை அளித்தாரே, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதா? இதற்கு இந்த அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த ஒரு நடவடிக்கையிலிருந்து, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
இறுதியாக, வரும் 2026 ஜனவரிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,595 பணியிடங்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 19,260 பணியிடங்களுக்கும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3,041 பணியிடங்களுக்கும், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 பணியிடங்களுக்கும், ஆக மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று விதி 110 அறிக்கையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தவிர, பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கின்ற நிலையில், 75,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது "யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவது" போலாகும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை வழங்குவதில் உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், காலியாகவுள்ள அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப, 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப உயர்த்தியும், இனி வருங்காலங்களில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளின் மூலமாக மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.