ஆக்குவது கடினம் அழிப்பது சுலபம் ஆவினை அழிக்குறீர்கள் - அரசுக்கு ஓபிஎஸ்

O Paneer Selvam Government of Tamil Nadu ADMK Chief Minister of Tamil Nadu
By Karthick Jun 25, 2024 02:21 PM GMT
Report

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

ஓபிஎஸ் அறிக்கை

ஆவின் நிறுவனத்தில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருவதையும், அதே சமயத்தில் ஆவின் பொருட்களின் விநியோகம் குறைந்து கொண்டே செல்வதையும் பார்க்கும்போது, “ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்” என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. ஏழையெளிய மக்களுக்காக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட ஆவின் நிறுவனம் அழிந்து கொண்டே செல்வது மிகுந்த பேரதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

O Pannerselvam

ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பால் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஓராண்டாகவே ஆவின் வெண்ணெய் பல பகுதிகளில் கிடைப்பதேயில்லை. இதன் விளைவாக, பெரும்பாலான இடங்களில் அமுல், மில்கி மிஸ்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் வெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக ஆவின் நெய் மற்றும் பனீரும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் பால் பொருட்களின் உற்பத்தி ஆவின் நிறுவனத்தில் குறைந்துள்ளதுதான். ஒரு பக்கம் பால் பொருட்கள் உற்பத்தி 23 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார். கள நிலவரமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

வெளியேறிய ஆதரவாளர்கள் - தனித்து போகும் ஓபிஎஸ்....பாஜகவில் ஐக்கியமா?

வெளியேறிய ஆதரவாளர்கள் - தனித்து போகும் ஓபிஎஸ்....பாஜகவில் ஐக்கியமா?

இந்த நிலையில், அம்பத்தூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (நுககடரநவே கூசநயவஅநவே ஞடயவே) சரியாக இயங்கவில்லை என்றும்; விரிவாக்கத்திற்கான அனுமதியை ஆவின் நிறுவனம் பெறவில்லை என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அம்பத்தூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையை பலமுறை ஆய்வு செய்ததாகவும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பல உபகரணங்கள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக சுத்திகரிப்பு செய்யப்படாத நீர் ஓடுவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் வெளிப்புறத்தில் மலைபோல் தேங்கி இருப்பதாகவும் எத்தனையோ முறை அறிவுறுத்தியும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்யவோ, பிளாஸ்டிக் கழிவை அப்புறப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் ஆவின் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

இதன் விளைவாக, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அம்பத்தூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையின் உற்பத்தியை தினசரி 4 லட்சம் லிட்டர் என்பதிலிருந்து 3 லட்சம் லிட்டராக குறைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், பிளாஸ்டிக் கழிவிற்கு மூடிய கிடங்கினை இரண்டு மாதங்களுக்குள் அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது குறித்த விசாரணை வருகின்ற ஜூலை 16-ஆம் நாள் தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்பு வருகிறது. எது எப்படியோ, இன்னும் இரண்டு மாதங்களுக்கு பால் பொருட்களின் உற்பத்தி வெகுவாகக் குறையும் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.


இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு அகவிலைப்படி உயர்வான எட்டு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு அகவிலைப்படியைக் கூட அளிக்காத ஆவின் நிறுவனம், எப்படி மாசுக் கட்டுப்பாடு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யப் போகிறது என்று தெரியவில்லை. மொத்தத்தில், ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த நிலை நீடித்தால், ஆவின் நிறுவனம் மூடும் சூழ்நிலை உருவாகும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக கிடைக்கவும், ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்  என பதிவிட்டுள்ளார்.