ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல உள்ளது - ஓபிஎஸ் காட்டம்!
கார் பந்தயம் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் காட்டம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்து வரி உயர்வு குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு வாகனக் கட்டண உயர்வு,
கட்டட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உலகத் தமிழர்கள் எல்லாம் நிலைகுலைந்து போன நிலையில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார் மறைந்த தி.மு.க. தலைவர்.
அதே வழியில், தற்போது கார் பந்தயத்தை நடத்த துடிக்கிறார் தற்போதைய தி.மு.க. தலைவர். தமிழ்நாட்டினுடைய கடன் 8,33,362 கோடி ரூபாயாகயும், நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில்,
நீரோ மன்னன்..
இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம்தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.போதைப் பொருட்கள் நடமாட்டம் காரணமாக ஆங்காங்கே கொலை, கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இப்படிப்பட்ட சோதனை காலத்தில், சென்னையில் கார் பந்தயம் நடத்துவது என்பது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது. சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
இந்தக் கார் பந்தயத்தின் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் முன்னிலைப்படுத்தப்படுவாரே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை. மாறாக, மக்களின் பணம் வீணடிக்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்,
கார் பந்தயம் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.