2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக நிச்சயம் இணையும் - ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இணைப்பு உறுதி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளுங்கள் என்று சசிகலா எந்த நேரத்தில் யாரிடத்தில் சொன்னார்கள்? அவர்கள் எந்த ஒரு கோரிக்கையும் வேண்டுகோளும் வைக்கவில்லை.
அதிமுக ஒன்றுபட வேண்டுமென்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று யாரிடத்திலும் சென்று யாசகம் கேட்கவில்லை.அதிமுக பிரிந்து இருப்பதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.
உதயகுமாரின் கருத்துகளுக்கு பதில் சொல்கிற இடத்தில் நான் இல்லை. சசிகலா முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி எப்படி நடந்து கொண்டார் என்று அனைவருக்கும் தெரியும். நான் அதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
அதிமுக - வை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடக்கும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இணைப்பு உறுதியாக நடைபெறும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அதிமுக அனைத்து வழக்குகளும் தற்காலிக வழக்காகத்தான் இருக்கின்றது.
அதிமுக இணையும்
1989 தேர்தலுக்கு முன்னால் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி இடையே கருத்து பரிமாற்றங்கள் இருந்தன. தேர்தலுக்குப் பின்னால் அனைத்து தலைவர்கள் இணைவதற்கு முன்பாகவே தொண்டர்கள் இணைந்து விட்டனர்.
அந்த சூழல் தான் தற்போது நிலவி வருகிறது.இந்த ஆட்சியில் நடைபெறக்கூடிய அவலங்கள் நீக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும். சசிகலாவின் முயற்சி நல்ல முயற்சி. அவர் மக்களின் கருத்தை அறிவதற்காக தனியாக பயணம் செய்கிறார்.
நான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அமைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன். இருவருடைய எண்ணமும் இலக்கும் ஒன்றுதான். அதிமுக கட்சி மீண்டும் புதுப்பொலிவுடன் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும்,
நினைக்கின்றவர்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். யாராக இருந்தாலும் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.