கொளுத்தும் கோடை வெயில்; ஊட்டிக்கே இந்த நிலைமையா - பதிவான வெப்பநிலை?
ஊட்டியில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வெப்ப அலை
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 108 டிகிரியை தொட்டுள்ளது.
இதனால் மக்கள் பலரும் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு குடும்பத்தோடு செல்கின்றனர்.
ஊட்டியில் 84.2 டிகிரி
ஆனால், ஊட்டியிலேயே இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது.
இதனால் ஊட்டிக்கே இந்த நிலைமையா? என்று சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்பு அங்கு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.