ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோ; எப்பொழுது தொடக்கம் - வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே டிக்கெட்டில் 3 பொது போக்குவரத்திலும் பயணம் செய்யும் திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என 3 பொது போக்குவரத்து உள்ளது. இதில் பயணம் செய்ய தற்போது தனி தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர். இவை அனைத்திலும் பயணம் செய்யும் வகையில் ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது.
தனி செயலி
ஒரே ஸ்மார்ட் டிக்கெட் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என மூன்றிலும் பயணிக்கும் திட்டதிற்காக தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரி இருந்தது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம். தற்போது அதற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.
முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் மாநகர பேருந்துகள், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என் மூன்றிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.