மக்களே உஷார்..! வெளிநாட்டு பார்சல் என்ற பெயரில் ரூ.80 லட்சம் மோசடி - கதறும் மூதாட்டி!
மோசடி கும்பலிடம் மூதாட்டி ஒருவர் ரூ.80 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூதன மோசடி
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் 63 வயது பெண்மணி ஒருவர் lவசித்து வருகிறார். இவருக்கு வந்த ஒரு தொலைப்பேசி அழைப்பில் பேசிய நபர், சர்வதேச கொரியர் சேவை நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
பின்னர் அந்த மூதாட்டியின் பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதில் கடத்தப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த மூதாட்டி மறுப்பு தெரிவித்தபோது, அவரை பற்றிய அடிப்படை தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சகம் போல கடிதங்களை அனுப்பியுள்ளனர். மேலும், வீடியோ கால் மூலம் அந்த மூதாட்டியை தொடர்பு கொடு அதிகாரிகள் போல நடித்து நம்ப வைத்துள்ளனர்.
காவல்துறை அறிவுறுத்தல்
பின்னர் பார்சலில் கடத்தல் பொருட்கள் வந்திருப்பதால் அதிகாரிகள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதிலிருந்து காப்பாற்ற தாங்கள் உதவி செய்வதாக மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக படிப்படியாக அவரிடம் இருந்து ரூ. 80 லட்சம் வரை மோசடியாளர்கள் பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து அழைப்புகள் ஏதும் வராமல் இருந்துள்ளது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த மூதாட்டி உணர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதுபோல அழைப்புகள் வரும்போது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அச்சப்படக்கூடாது எனவும் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.