மணமகளுக்கு 68; மணமகனுக்கு 64 - காப்பகத்தில் நடந்த காதல் திருமணம்!
முதியோர் காப்பகத்தில் நடந்த காதல் திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர் இல்லம்
ஆந்திரா, ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இதில் நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் 2 ஆண்டுகளாக தங்கியுள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது. இவருக்கு உதவியாக கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி(68), என்பவர் இருந்துள்ளார்.
அவர் சாப்பிடவும், நடக்கவும் உதவி புரிந்துள்ளார். இந்நிலையில் வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை உணர்ந்த இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.
காதல் திருமணம்
தொடர்ந்து இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டு, மூர்த்தி, ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பேசுகையில்,
"வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும். இதை நாங்கள் உணர்ந்தோம். முதிர்வயதை ஒரு தடையாக நாங்கள் நினைக்கவில்லை. மனம் ஒத்துப் போனது, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இறுதி நாட்கள் வரை பிரியாமல் வாழ்வோம்" என்று தெரிவித்துள்ளனர்.