‘’ அண்ணாமலைக்கு நாங்க பயப்பட மாட்டோம்" : பதிலடி கொடுத்த அமைச்சர்
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்தார், அதன் பிறகு அண்ணாமலை திமுக அமைச்சர்க்ளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறிய நிலையில் அண்ணாமலைக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என திமுக அமைச்சர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.

தப்பு கணக்கு போடும் பாஜக
அந்த வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்று கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி:
'மத்தியில் ஆட்சி அதிகாரம் பாஜக கையில் உள்ளதால் தமிழகத்தில் எங்கேயாவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிவிட முடியுமா என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுவதாகவும் அவர்களுடைய கணக்கு எந்த காலத்திலும் நிறைவேறாது என்றும் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது அது பகல் கனவாகவே போய்விடும் என்று கூறினார்.

மடியில் கனமில்லை
மேலும், அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறினாரே? என செய்தியாளர்கள் கூறியதற்கு, எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்றும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்றுஅமைச்சர் ரகுபதி கூறினார்