அதை செய்யாவிட்டால்..அச்சாணி இல்லாத தேர் போல திமுக ஆட்சி முடிந்துவிடும்- ஓபிஎஸ்!
நெல் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக விடுத்த அறிக்கையில், நெல்லுக்கான ஆதார விலை குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதுவரை 3 ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் சாதாரண நெல் குவிண்டால் 2,265 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், வருடம் தோறும் உயர்ந்து கொண்டே செல்லும் சாகுபடி செலவினை வைத்துப் பார்த்தால் தற்போதைய நெல் கொள்முதல்
விலை என்பது மிக மிகக் குறைவாகும். அதிக மகசூல் கிடைத்தாலும், லாபம் கிடைப்பதில்லை என்ற நிலைதான் நீடிக்கிறது. நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஓபிஎஸ்
ஒடிசா மாநிலத்தில் புதிய அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், பின்தங்கிய மாநிலமான ஒடிசாவிலேயே இந்த அளவுக்கு நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது எனில் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு எது தடையாக உள்ளது.
நெல் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு தொடர்ந்து தயக்கம் காட்டுமேயானால், வேளாண் தொழிலையே கைவிடும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு கொள்கை வகுக்க வேண்டும், முனைப்பு காட்ட வேண்டும்.
ஆனால், திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், அச்சாணி இல்லாத தேர் எவ்வாறு ஓடாமல் முறிந்துவிடுமோ, அதுபோல திமுக ஆட்சியும் முடிந்துவிடும் என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.