குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Tamil nadu Government of Tamil Nadu DMK O. Panneerselvam
By Jiyath Oct 07, 2023 08:45 AM GMT
Report

குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஓ. பன்னீர்செல்வம் 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை பாதுகாப்பதிலும், விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.

குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்! | O Panneerselvam Emphasis To Tn Governement

இதற்கு முற்றிலும் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசாக கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவிலும் தி.மு.க.வின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பதால், தண்ணீரை தி.மு.க. எப்படியும் பெற்றுத் தரும் என்று நம்பி குறுவை சாகுபடியை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால், கர்நாடக அரசோ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தி.மு.க.வும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தோழமை ரீதியாக கர்நாடகத்திடமிருந்து பெற்றுதர தவறிவிட்டது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே சட்டப் போராட்டத்தை நடத்தாமல், காலந்தாழ்த்தி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 18,000 கன அடி நீர் திறந்துவிட்டால்தான் வயல்களுக்கு நீர்பாயும் என்ற நிலையில், வெறும் 5,000 கன அடி நீரை திறந்துவிடுவது என்பது எதற்கும் பயனற்றது. இதன்மூலம் ஒருபோக சாகுபடிக்கே உறுதியில்லாத நிலை உருவாகியுள்ளது. குறுவை சாகுபடி மேற்கொண்டவர்கள் மட்டுமல்லாமல் நீண்ட கால சம்பா நெல் விதைப்பு மேற்கொண்டவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நெற்பயிர் குன்றி, களைகள் ஓங்கி வளர்ந்து, வயல்கள் எல்லாம் புல் காடாக காட்சி அளிக்கிறது.

வலியுறுத்தல் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தி.மு.க. அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் ஹெக்டேருக்கு 84,000 ரூபாய் கிடைத்திருக்கும் என்றும், தற்போது தி.மு.க. அரசால் வெறும் 13,500 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும், இது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்! | O Panneerselvam Emphasis To Tn Governement

தி.மு.க. அரசு பணத்தை மிச்சப்படுத்த வேண்டுமென்பதற்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இன்று இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் விவசாயிகள் தான் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், மத்திய உள் துறை அமைச்சகத்தால் 11-07-2023 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், 2023-24 முதல் இழப்பீடு 17,000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஒரு தெளிவான அரசாணையை பிறப்பித்து அதன் அடிப்படையில் நிவாரண உதவி வழங்காமல், ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் என்ற பழைய இழப்பீட்டையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருப்பது விவசாயிகள் மீதுள்ள அக்கறையின்மையை தெளிவுபடுத்துகிறது.

'சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக' - எடப்பாடி பழனிசாமி!

'சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக' - எடப்பாடி பழனிசாமி!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிக்கையில், 40,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் வெறும் 610 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி கணக்கிட்டால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.