பொதுக்குழுவுக்கு வாங்க... பேசித் தீர்த்துப்போம்.. - ஓ.பி.எஸ்.க்கு எடப்பாடி கடிதம்
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் உடனான தீவிர ஆலோசனைக்கு பின் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேசித் தீர்த்துக்கலாம் வாங்க... எடப்பாடி கடிதம்
இந்நிலையில், எடப்பாடி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பொதுக்குழுவுக்கு வாருங்கள்; பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், இக்கடிதத்தில் ஒற்றைத்தலைமை குறித்து எந்த தகவலையும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடவில்லை.