நீதிபதி வீட்டில் 207 சவரன் நகை, பணம் கொள்ளை - வீட்டுக்குள்ளேயே இருந்து வேலையை காட்டிய பெண்!
சென்னையில் பெண் நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் நீதிபதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்ஸோ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வி, தனது பெற்றோருடன் சென்னை,அசோக் நகர், 62-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த 6-ம் தேதி நீதிபதியின் தந்தை மதுரகவி என்பவர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது வீட்டிலிருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் 2.5 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது என குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் நீதிபதியின் தாயாருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் செவிலியர் தேவி என்பவர் பணியமர்த்தப்பட்டார்.
இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நீதிபதி வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடி அவரது கள்ளக்காதலன் ஜெகநாதன் என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்தது தெரிய வந்தது.
அதனால் அவர்களிடமிருந்து, திருடப்பட்ட 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.34,000 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.