இந்த கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் - சீமான்
கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சாட்டை துரைமுருகன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாட்டு பாடியதற்காக கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த சீமான் அந்த பாடலை நானும் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விட்டார்.
சீமானின் பேச்சுக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், சேகர் பாபு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
சீமான்
இதில் பேசிய சீமான், துரைமுருகன் பாடிய பாட்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இயற்றிய பாடல். ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அன்றைக்கு தி.மு.க.,வினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை. அதை நாங்கள் பாடும் போது கோபம் வருகிறது. அவதூறு பேச்சின் ஆதித் தாயே திமுக தான்.
ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியானது, அவர் தகுதியினால் வரவில்லை. இவங்க தான் அவரை நீதிபதியாக்கினார்கள் என்று ஆர் எஸ் பாரதி பேசினார். இது நாங்க போட்ட பிச்சை என்று பேசுகிறார்கள். உங்கள் ஆட்சி அதிகாரம் எல்லாம் நாங்க போட்ட பிச்சை என்று நாங்கள் யாரும் சொல்லவில்லையே.
கருணாநிதி
சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு உண்மையில் தெரியாது. அந்தப் பெயரில் ஒரு சமுகம் இருப்பது எங்களுக்குத் தெரியாது. கிராமங்களில் குறிப்பிட்ட அந்த வார்த்தை இயல்பாக உபயோகப்படுத்தும் வார்த்தை. கந்த சஷ்டி கவசம், திரு மந்திரம், கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களில் கூட சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது.
சண்டாளி என திரைப்பட பாடலே உள்ளது. பாசப்பறவை படத்தில் கூட அந்த நீதிமன்ற காட்சியில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இதேபோல் சேது சமுத்திர திட்டத்தை எந்த சண்டாளன் கெடுத்தான் என்றும் கருணாநிதி தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
கூட்டணி
திமுக கூட்டணியில் ஒரு பொதுத் தொகுதியை கேட்டுவாங்க முடியாத திருமாவளவன், 16 பொதுத் தொகுதியில் போட்டியிட்ட நான் சாதி பெருமை பேசுவதாக எப்படி கூற முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் அ.தி.மு.க தேர்தலை புறக்கணித்தது. ஆனால் நாங்கள் வளரும் கட்சி அப்படி முடிவெடுக்க முடியாது.
எங்கள் கருத்துகளை வைத்துக்கொண்டு, நாம் தமிழர் கட்சி என ஒரு கட்சி இருக்கிறது என மக்களுக்கு கூறிக்கொண்டே இருக்கிறோம். கூட்டணி என்னும் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. என் கனவை ஏற்று, எங்கள் கொள்கைக்கு உடன்பாடும் கட்சிகள், கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். என பேசியுள்ளார்.