சீமான் விரைவில் கைது ஆகிறாரா? - அமைச்சர் சேகர் பாபு பதில்
அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சாட்டை துரைமுருகன்
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை10 ம் தேதி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டார். இவரை ஆதரித்து அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.
அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறித்து அவதூறாக பாட்டு பாடியதாக 2 நாட்களுக்கு முன்னர் குற்றாலத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேகர் பாபு
இந்த கைது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதில் பேசிய அவர், என்னை விடவா சாட்டை துரைமுருகன் பேசி விட்டார். நானும் அதே பாட்டை பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என அந்த பாட்டை பாடினார்.
இந்நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து காவல் நிலையங்களில் பொது நல விரும்பிகள் புகார் அளித்துள்ளனர். சட்டப்படி சாத்தியக்கூறுகள் இருந்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே வார்த்தைக்காக அவர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார். அரசியல் பார்வைகள் அவர் மேல் திரும்ப வேண்டும் என்பதற்காக பேசுகிறார். சீமானின் வாய்கொழுப்புக்கு மக்கள் தகுந்த படத்தை புகட்டுவார்கள் என பேசினார்.