மக்களால் - மக்களுடன் - மக்களே நிற்கிறோம்...திரள்நிதி திட்டம் துவங்கிய நா.த.க
வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக திரள்நிதி என்ற திட்டத்தை நாம் தமிழர் கட்சி துவங்கியுள்ளது.
கட்சி அறிக்கை
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 2024 இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்துத் தேர்தல் களம் காண்கின்றது.
பெரும் பொருளாதாரம், அதிகாரம், ஊடகம் போன்ற வலிமைகளைக் கொண்ட கட்சிகளாக ஒன்றிய, மாநில ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் விளங்குகின்றன. இருந்தும், தாங்கள் செய்த சாதனைகளையோ, மக்கள் நலன்சார்ந்த செயல்களையோ முன்னிறுத்தி வாக்கு கேட்காமல், பிற பிழையான வழிகளைக் கடைப்பிடித்து, வெற்றிபெறும் நோக்கில் தொடர்ந்து களம் கண்டு வருவதைக் கடந்த காலங்களில் நாம் ஒவ்வொருவரும் நேரடியாகக் கண்டிருக்கிறோம்.
ஆனால் சமரசமின்றி மக்கள் நலன் சார்ந்து தனித்தியங்கும் நாம் தமிழர் கட்சி, மக்களைப் பெருமளவில் சென்றடையப் பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது. அறத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்மையுடன் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி, படித்த, பொருளாதார நிறைவைக் கண்டவர்கள் மட்டுமல்லாது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், உழவர் குடிகள், எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துகிறது.
வலிமை சேர்க்க....
தேர்தல் செலவாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 95 இலட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி மிகக் குறைந்த பொருளாதார நிலையிலேயே தொடர்ந்து தேர்தல் களம் கண்டு, பெரும் வளர்ச்சியை ஈட்டியுள்ளது அனைத்துத் தரப்பினையும் வியக்க வைத்துள்ளது.
அச்சு, வலையொளி மற்றும் தொலைக்காட்சி ஊடக விளம்பரங்கள், தலைமைப் பரப்புரைப் பயணச் செலவுகள், வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள், முதன்மைப் பரப்புரையாளர்களின் பயணச் செலவுகள், தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிச் செலவுகள் எனப் பலதரப்பட்ட செலவுகளுக்குக் கணிசமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது.
2024 நாடாளுமன்றத் தேர்தல்
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) February 16, 2024
மக்களுடன் நிற்கிறோம்!
மக்களுக்காக நிற்கிறோம்!
மக்களை நம்பி நிற்கிறோம்!
மக்கள் நம்ப நிற்கிறோம்!
?மக்கள் திரள்நிதித் திட்டம்!#Donate4Change
2024 இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி… pic.twitter.com/aNKeXtgqZc
தேர்தல் செலவுகளுக்காக மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) மூலம் பொருளாதாரத்தைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழமைபோல் வரவு – செலவு கணக்குகள் வெளிப்படையாக இணையத்தில் வெளியிடப்படும். எனவே இத்திட்டத்திற்குப் பேராதரவு தந்து பொருளுதவி செய்து வலிமை சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.