நீட் மறுதேர்வு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீட் தேர்வு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு நடந்தும் தேசிய தேர்வு முகமை சார்பில் நேரம் குறைவாக வழங்கப்பட 1563 மாணவர்களுக்கு மட்டுமே கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம்
வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் கருணை மனு அளிக்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மறு தேர்வானது ஜூன் 23ஆம் தேதிநடைபெறும், ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு
மேலும் இதற்கான அறிவிப்பு இன்றே (ஜூன் 13) வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வு எழுத மறுக்கும் மாணவர்கள் கருணை மதிப்பெண் இல்லாமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மறுதேர்வு முடிவுகளையும் வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.