நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறுமா? - NTA விளக்கம்
2025 ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
OMR முறை
இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநிலங்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நீட் தேர்வில் நடைபெறும் மோசடிகளை தடுக்க முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்னன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சமீபத்தில் அளித்த பரிந்துரையில் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தலாம். அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் வினாத்தாளை டிஜிட்டல் முறையில் அனுப்பலாம் போன்ற பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
NEET UG 2025 to be conducted in Pen and Paper mode (OMR based) in Single day and Single Shift. pic.twitter.com/H1DYTgSGqI
— National Testing Agency (@NTA_Exams) January 16, 2025
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் OMR முறையிலே தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. மேலும் ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளது.