பெண்களே கவனம்; நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி - மிரண்டு போன மருத்துவர்கள்!
பெண் ஒருவரின் மூக்குத்தி திருகாணி நுரையீரலில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூக்குத்தி
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் வர்ஷா (35) . இவருக்கு கடந்த சில நாட்களாகவே வறட்டு இருமல் இருந்துள்ளது. அப்போது அவர் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி கழன்று நுரையீரலுக்குள் சிக்கியது. வயிற்றுக்குள் சென்றதாக நினைத்த வர்ஷா செரிமானமாகிவிடும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு மூச்சுவிட கடினமாக இருப்பதை அந்த பெண் உணர்ந்துள்ளார். அவர் திடீரென இருமும்போது சளியில் ரத்தம் வந்ததை பார்த்து பயந்த உடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார்.அங்கு பரிசோதனை மூலம் அவரது நுரையீரலில் மூக்குத்தியின் திருகாணி சிக்கி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
ஆபத்து
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்திற்காக அணிந்த மூக்குத்தியின் திருகாணி இது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,கடும் முயற்சிக்கு பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூச்சு குழாயிலிருந்து திருகாணியை மருத்துவர்கள் அகற்றினர். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இது குறித்து பேசிய மருத்துவ குழு,
"இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. பொதுவாக, சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது சிறிய பொருட்களை நுரையீரல்களுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம். ஆனால், இந்த சம்பவம் மிகவும் அரிதாக உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.