தலைவிரித்தாடும் கொரோனா; திணறும் மக்கள் - 5 நாள்கள் முழு ஊரடங்கு!
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மர்மக் காய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று பரவல் 2 ஆண்டுகள் தாண்டிய பின்னரும் ஓயாமல் உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தொற்றின் தாக்கம் ஓய்ந்தாலும், ஒரு சில நாடுகள் மீண்டும் மீண்டும் பாதிப்பை கண்டுவருகின்றனர். தற்போது வரை ஏறத்தாழ 70 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடகொரியாவிலும் கடந்த சில நாள்களாக கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாள்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
அங்கு சில நாள்களாகவே மூச்சு திணறல் சார்ந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்து வந்தது. எனவே, ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் என்ற பயத்தில் மக்கள் அதிக அளவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து, மர்மக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தலைநகர் பியாங்யாங்கில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கு அதிபர் கிம் ஜாங் யுன் ஆட்சி செய்து வரும் நிலையில்,
அந்நாட்டு அரசு கொரோனா பரிசோதனை, பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டுவதில்லை. மாறாக கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடாமல் காய்ச்சல் பாதிப்பாக மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது.