வடமாநிலத் தொழிலாளர் - வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்ய தடை
வடமாநிலத் தொழிலாளர் குறித்த வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வதந்தி
இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் 12 புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தரப்பில் 12 வாரங்கள் ஜாமீன் கேட்டு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
கைது செய்ய தடை
ஆனால், வதந்தி பரப்பியதற்காக பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பிரசாந்த் உம்ராவ் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரசாந்த் உம்ராவை வரும் 20ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். பிரசாந்த் உம்ராவ் சென்னை உயர்நீதிமன்றத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திலோ ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரது செல்போன் லொகேஷன் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை ஆன் செய்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.