தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - பரபரப்பு!
வடமாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வடமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் நிறைய பேர் வேலை செய்து வருகின்றனர். சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
அங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர் அதில் பலர் மது அருந்தியிருந்தனர். அவர்கள் இரு பிரிவினராக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நேரில் சென்று மோதலை விலக்கி அவர்களை விரட்ட முயன்றனர்.
தாக்குதல்
இந்நிலையில், அந்த வட மாநில தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். பின்னர் கல் மற்றும் கட்டையை வைத்து தாக்குதல் நடத்தினர். மேலும், அவரது டூவீலரையும் அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலில் காவலர் படுகாயமடைந்தார். பின்னர் அதிகமான போலீசார் அங்கு சென்ற நிலையில் வடமாநில தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிவிட்டனர்.
காயமடைந்த போலீசை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரகுபதியை தாக்கியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதில் தாக்குதல் நடத்தியதாக 5 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.