பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை - நீதிமன்றம் உத்தரவு!
இந்து அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்குள் வர அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இது கடும் சர்ச்சையானதால் உடனடியாக அந்த பலகை நீக்கப்பட்டது. இதனையடுத்து இந்து அல்லாதோர் கோவிலுக்குள் வரக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில், இந்து அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோவிலில் உள்ள கொடி மரத்தை தாண்டி வரக்கூடாது. இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையாத தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.
மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், அதற்காக தனியே பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும். பதிவேட்டில், கடவுளின் மீது நம்பிக்கை உண்டு என்று எழுதி வாங்கிய பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.