பழனி உண்டியலில் தாலி செயினை தவறுதலாக போட்ட பெண் - அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
உண்டியலில் தவறுதலாக பெண் பக்தர் ஒருவர் தாலிச்சங்கிலியை செலுத்தியுள்ளார்.
பெண் பரிதவிப்பு
கேரளா, ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த துளசி மணி மாலையை உண்டியலில் செலுத்தினார்.
அதில், தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே முக்கால் சவரன் தாலிச்சங்கிலியையும் தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண், மலைக்கோவில் அலுவலகத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
நெகிழ்ச்சி
மேலும், தனது குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும், தாலிச்சங்கிலியை எடுத்து தருமாறும் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார். அதனையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது.
ஆனால், சட்டப்படி உண்டியலில் விழுந்த எந்த பொருளும் மீண்டும் திரும்பி வழங்கமுடியாது என்பதால் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த நிதியில் இருந்து தாலிச்சங்கிலியை வழங்க முடிவுசெய்தார்.
தொடர்ந்து, 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 17.460 கிராம் எடை அளவுடைய தங்கச்சங்கிலியை வழங்கினார். இந்தச் சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.