காவிரியில் இருந்து தண்ணீர் இனி திறக்கவே முடியாது - கர்நாடக அரசு திட்டவட்டம்
161 தாலுகாக்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதால் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சனை
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்ந்து வருகின்றது. இன்று நேற்று துவங்கிய பிரச்சனையல்ல - தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று வருகின்றது. தொடர்பாக கடந்த 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இனி தண்ணீரை திறக்கமுடியாது
உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை மீண்டும் உறுதி செய்த போதிலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த உத்தவிற்கு எதிராக இன்று பெங்களூரில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுக்காற்று கூட்டத்தில், 161 தாலுகாக்களில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுவதால், இனிமேலும் காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை 5,000 கன அடியிலிருந்து மேலும் குறைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் 3000 கன அடியாக திறந்து விட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.