யுபிஐ பயன்பாட்டை நிறுத்தும் கடைகள் - அரசுக்கு எஸ்பிஐ வார்னிங்!
கடுமையாக ஜிஎஸ்டி விதிப்பது குறித்து எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி எதிரொலி
இந்தியாவில் யு.பி.ஐ தீவிரமாக பயன்படுத்தப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். அங்கு 90% சிறு - குறு கடைகளில் யு.பி.ஐ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கு மாநிலம் முழுவதும் கர்நாடக வணிக வரித்துறை, சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யு.பி.ஐ மூலம் வருவாயை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வர்த்தகம் செய்தவர்களுக்கு, பதிவு மற்றும் வரி செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனை செய்பவர்களுக்கு வழிகாட்டவும், சரியான வரி மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யுபிஐ நிறுத்தம்
நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை விமர்சித்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளை துல்லியமாக கணக்கிட்டு வரி ஏய்ப்பை குறைக்கும் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
அதிகப்படியான கண்காணிப்பு சிறு வணிகங்களை முறைசாரா ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளி, ஒழுங்குபடுத்தும் நோக்கத்தையே தகர்க்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.