இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிச்சாமி உறுதி
அதிமுகவில் இணைப்புக்கு பேச்சே இல்லை என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்கு கொண்டு வந்த அனைத்து திட்டங்களை திமுக அரசு தடுத்து விட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். நிதி அமைச்சர் முடியாது என்றார். ஆசிரியர்களையும் கைவிட்டு விட்டனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கின்றது.
இணைப்புக்கு இடமில்லை
இந்தி மொழிக்கு எதிர்ப்பு என்பது காங்கிரஸ் ஆட்சியில் தான் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு திமுக ஏமாற்றுகிறது. 2024 ல் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாக வர வாய்ப்பிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து இரு தேர்தலில் வெற்றி பெறுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்ற அவர் இணைப்புக்கு பேச்சே இல்லை என்றும் கட்சி பிரிந்தது என ஊடகத்தினர் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.