மீளா உறக்கத்திற்கு சென்ற சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் - தொடர் முயற்சியில் ISRO!
விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ (ISRO).
நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் 12 நாட்கள் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதில் ஆக்ஸிஜன், மாங்கனீஸ், சிலிகான், இரும்பு, கால்சியம், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால், ரோவர் மற்றும் லேண்டர் காலங்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையா நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
சிக்னல் கிடைக்கவில்லை
ஏனெனில், லேண்டர், ரோவர் கலன்கள் சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியை கொண்டே இயங்குகின்றன. இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன.
மேலும், நிலவில் பகல் வந்ததும் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் கழித்து நிலவின் தென்துருவப் பகுதியில் தற்போது சூரிய உதயம் தொடங்கியது. இதனால் இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் முயற்சியை முன்னெடுத்தது இஸ்ரோ.
ஆனால் உறக்கத்துக்கு பிறகு இன்று மீண்டும் விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.