அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை - பள்ளியின் கண்டிஷன் - கொதித்த பெற்றோர்கள்!
அசைவ உணவுகள் வேண்டாம் என்ற பள்ளியின் புதிய விதிமுறை சர்ச்சையாகியுள்ளது.
அசைவ உணவுகள்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு டிபன் பாக்சில் அசைவ உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசைவ உணவுகளை அதிகாலையிலேயே சமைத்து டிபன் பாக்சில் வைத்து அனுப்புவதால், மதிய நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுப்போக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாகவே இத்தகைய விதிமுறை ஏற்படுத்தப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மேலும் இதை ஒரு கோரிக்கையாக மட்டுமே பெற்றோரிடம் முன்வைப்பதாகவும், சைவ உணவுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பலதரப்பட்ட மாணவர் சமுதாயத்திற்கு மரியாதை அளிப்பதாகவும் இருக்கக் கூடும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பள்ளி கண்டிஷன்
நொய்டா பள்ளி நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரின் உணவு பழக்கவழக்கம் எப்படி மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை பாதிக்கும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முறையாக சமைக்காத, சேமிக்காத எந்த உணவாக இருந்தாலும் அது கெட்டுப்போகவே செய்யும் எனவும் அவர்கள் பதிலளித்துள்ளனர். அதே சமயம், பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறைக்கு ஒரு தரப்பினரிடையே ஆதரவும் நிலவி வருகிறது. அதே போல், சைவ உணவுகளை சாப்பிட தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், அதை கட்டாயப்படுத்தக் கூடாது என மாணவர்கள் கூறியுள்ளனர்.