நிதியுதவி வழங்கப்போவதில்லை - இலங்கையை கைவிட்ட உலக வங்கி
முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டு வராதவரை இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது.
இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.
உலக வங்கி
இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழ்மையான மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.