வங்கியில் மினிமம் பேலன்ஸ்க்கு அபராதம்? புது ரூல்ஸ் - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
வங்கி கணக்குகள் குறித்த முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு
இந்த ஆண்டிற்கான 2024 முக்கிய விதிமுறை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். செயலற்ற கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கட்டணம் வசூலிக்கக்கூடாது.
செயலற்றதாக இருந்த வங்கிக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வில்லை என கூறி அபராதம் விதிக்கக் கூடாது. கல்வி உதவித் தொகை, அரசு மானிய உதவி பெரும் நோக்கில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை செயலற்றதாக அறிவிக்கக் கூடாது.
ஆர்பிஐ விதிமுறை
இத்தகைய கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் இது பொருந்தும். செயலற்ற கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான (KYC) தகவலைப் புதுப்பிப்பிக்கும் வசதியை தனது கிளை அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டால், வீடியோ காட்சி மூலம் அடையாளத்தை உறுதி செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் 10 ஆண்டுகளாக இயக்கப்படாத சேமிப்பு / நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புகள் மற்றும் முதிர்வுக்குப் பின் 10 ஆண்டுகளாக கேட்டுபெறப்படாத கால வைப்புகள் “கோரப்படாத வைப்புகள்” என்று வகைப்படுத்தப்படும்.
அத்தகைய வைப்புகளில் உள்ள தொகை இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படுகின்ற “வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி"யில் சேர்க்கப்படும்.
ஆயினும், வைப்புதாரர்கள் தங்களின் வைப்புகளில் உள்ள தொகையை, தாங்கள் எந்த வங்கிகளில் வைத்திருந்தனரோ அந்த வங்கிகளிடமிருந்து பின்னாளில் கூட உரிய வட்டியுடன் திரும்ப பெற உரிமையுண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.