இனி IPL போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
2025 ஐபிஎல் போட்டிகளை ரிலையன்ஸ்- டிஸ்னியின் புதிய செயலியில் சந்தா செலுத்தியே பார்க்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 17 தொடர்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 2025 ஐபிஎல் மார்ச் 22ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் சென்று ஐபிஎல் போட்டிகளை பார்ப்பது வழக்கம். கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் ஆப் மூலமாக பார்ப்பார்கள்.
ஐபிஎல் பார்க்க கட்டணம்
2023 முதல் 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான JIO Cinema ரூ.23,758 கோடிக்கு கைப்பற்றியது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை இலவசமாக அந்த நிறுவனம் தனது செயலியில் ஒளிபரப்பியது.
தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வியாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. இதற்காக $8.5 பில்லியன் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதிய செயலி
இதனையடுத்து புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் சில போட்டிகளை மட்டுமே இலவசமாக பார்க்க முடியும் என்றும், அதன் பிறகு கட்டணம் செலுத்தி சந்தாக்களை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் மூன்று மாதங்களுக்கு 149 ரூபாய்க்கு விளம்பரங்களுடன் கூடிய அடிப்படைத் திட்டத்தையும், 499 ரூபாய்க்கு விளம்பரமில்லா திட்டத்தையும் வழங்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்லாது, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் உரிமை ஜியோ சினிமாவிடம் உள்ளது.