சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "வேகமாக நகரமயமாகும் மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை இன்றைக்கு விரிவடைந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
தட்டுப்பாடு இல்லை
அதேபோல், சென்னையின் மக்கள்தொகையும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கேற்ப சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேம்பாலப் பணிகள் திராவிட மாடல் ஆட்சியில் முழு வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கான திட்டங்களை தமிழக முதல்வர் பார்த்துபார்த்து செய்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.