அது ஒரு டம்மி டீம் - எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டாங்க..! ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவை கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி மிக வலிமையோடு வழி நடத்தி வருகின்றார் என்று கூறி, அத்தனை நிலைகளிலிருந்தும் இந்தியாவை வலிமையாக உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும், சிறப்பாக ஆட்சி செய்த மோடியே பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலுப்பெற்று இருப்பதாக சுட்டிக்காட்டி, வரும் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அது ஒரு டம்மி டீம்
தொடர்ந்து பேசிய அவர், I.N.D.I கூட்டணி ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர் என்றும் இந்தியாவை ஆள, கூட்டணியை ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லையென நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வரும் மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்த ஓபிஎஸ், தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தலைமையிலான அமைக்கப்பட்ட குழு ஒரு டம்மி குழு தான் என்று சாடினார்.
தமிழ்நாட்டில் இபிஎஸ் தலைமையில் கூட்டணிக்கு எந்த கட்சியும் போக தயாராக இல்லை என்று கூறி, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட இபிஎஸ் அணி வெற்றி பெறாது என ஆணித்தரமாக கூறினார்.