பொதுமக்கள் ஷாக்.. மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்
மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி,மின்கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதித்து இருந்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் மின் கட்டணத்தை உயர்த்தவும் இது குறித்து முடிவெடுக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செயப்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், நீதிபதிகள் தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.