நெற்பயிர்களை அழித்து விளைநிலத்தில் சுரங்க பணியை தொடங்கிய என்.எல்.சி - விவசாயிகள் வேதனை!
கிராமத்தில் உள்ள விளைநிலத்தை அழித்து என்.எல்.சி நிறுவனம் கால்வாய் பணியை தொண்டங்கியுள்ளனர்.
கால்வாய் பணி
கடலூர் மாவட்டம், மேல்வளையமாதேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு இன்று காலை சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இங்குள்ள விவசாய நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் வேதனை
இந்நிலையில், அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குகூட தயாராக இல்லாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். பயிர்கள் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.
ஆனால் கடந்த மாதமே இந்த நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் பேசி உரிய இழப்பீட்டை கொடுத்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விவசாயிகள் பலர் அங்கு திரண்டனர், இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் எந்திரம், தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.