தமிழக காவல்துறை, திமுக ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சனாதன சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது.
ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்" என்று பேசினார். உதயநிதியின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதி பேச்சை கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையில் "எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது.
சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையை புறக்கணித்தது போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவர் பேசியதாவது "சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டது, ஆச்சரியம் அளிப்பதுடன் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. காவல்துறையை பொறுத்தவரை நடுநிலை தவறிவிட்டனர். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை, திமுக ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்" என்று பேசியுள்ளார்.