நிவின் பாலி பாலியல் வழக்கு - அறிக்கையில் வெளியான உண்மை
நிவின் பாலி தொடர்புடைய பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிவின் பாலி
பிரேமம் படத்தில் நடித்தன் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர் தமிழில் நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி, இந்திய திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாலியல் புகார்
பல்வேறு மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் நிவின் பாலி மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை
இந்த பாலியல் புகாரை மறுத்த நிவின் பாலி, வழக்கைசட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை அளித்ததாக பெண் குறிப்பிட்ட தேதி மற்றும் இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவினர் இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலியின் பெயர் எஃப்ஐஆரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.