டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை - சரித்திரம் படைத்த வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வாஷிங்டன் சுந்தர் நிதிஷ் குமார் ரெட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
முதல் இரு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
பாக்சிங் டே டெஸ்ட்
இந்நிலையில், 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அடுத்தாக முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி, 2ஆம் நாள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3வது நாள் துவக்கத்தில் ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் வரிசையாக ஆட்டமிழக்க, இந்திய அணி ஃபாலோ ஆனை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆடி அணியை மீட்டெடுத்தனர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 285 பந்துகளில் 127 ரன்கள் சேர்த்தது. 162 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார்.
சாதனை
நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்நிலையில் இளம் வயதில் ஆஸ்திரேலியா மண்ணில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் ரிஷப் பந்திற்கு அடுத்ததாக நிதிஷ்குமார் ரெட்டி இணைந்துள்ளார். இந்த பார்டர் கவாஸ்கர் போட்டியின் மூலம் முதலாவது டெஸ்ட் தொடரை ஆடும் நிதிஷ்குமார் தனது கன்னி சதத்தை அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8வது வரிசையில் இறங்கிய வீரரும் 9வது வரிசையில் இறங்கிய வீரரும் ஒரே இன்னிங்ஸில் 150 பந்துகளுக்கு அதிகமாக சந்தித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.