இந்த திட்டத்தை வாபஸ் வாங்குங்க - மோடிக்கு குடைச்சலை ஆரம்பித்த நிதிஷ் குமார்!
பாஜக அரசுக்கு ஆதரவளிக்க முக்கிய நிபந்தனைகளை விதித்து வருகிறார் நிதிஷ் குமார்.
நிதிஷ் குமார்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. 16 இடங்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், 12 இடங்களை வைத்துள்ள நிதிஷ்குமாரும் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர்.
இக்கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு நிச்சயம் தேவை என்பதால் நிபந்தனைகளை விதிக்க துவங்கியுள்ளனர். சபாநாயகர் பதவி, அமைச்சரவையில் முக்கிய கேபினட் அமைச்சர் வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த நிதிஷ் குமார், மேலும் நெருக்கடி தரும் வகையில் அக்னிவீர் திட்டத்தை நீக்குவது குறித்து யோசிக்க வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் இருந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
அக்னிவீர் திட்டம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜேடியு தரப்பு நம்புகிறது. இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவார்கள். அதன் பிறகு, 25% அக்னி வீரர்கள் மட்டுமே அங்கே தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த 2022 ல் இந்த திட்டம் முதலில் அமல்படுத்தப்பட்ட போதே ராணுவத்திற்கு தயாராவோர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூட ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டத்தை நீக்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
எதிர்ப்பு
இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஜேடியு ஆதரவு முக்கியம் என்ற நிலையில், ஆரம்பமே பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக அக்னிவீர் திட்டத்தை நீக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜேடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும், ஜேடியு செய்தித் தொடர்பாளருமான கேசி தியாகி கூறுகையில், "அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதற்கு நல்ல வரவேற்பு இல்லை. மக்கள் இத்திட்டதை கடுமையாக விமர்சிக்கிறார்கள். தேர்தல்களிலும் அதன் தாக்கத்தை நாங்கள் கண்டோம். எனவே இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
மக்கள் இதில் உள்ள பல குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அந்த குறைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பொது சிவில் சட்டம் குறித்து ஏற்கனவே நிதிஷ் குமார் சட்ட கமிஷன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இத்திட்டத்திற்கு நாங்கள் எதிராக இல்லை.
ஆனால், அனைத்து தரப்புடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என விரும்புகிறோம். மேலும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, ,நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்துள்ளோம் " என தெரிவித்தார்.