ரயில்வே, உள்துறை, நிதித் துறைக்கு அடிப்போடும் நாயுடு? முழிக்கும் பாஜக - இனிதான் சிக்கலே..
சந்திரபாபு நாயுடு பாஜகவிடம் முக்கிய சில துறைகளை கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெஜாரிட்டி இழப்பு
2024 லோக்சபா தேர்தலில் 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்பிக்கள் உள்ளனர்.
எகிறும் தலைவலி
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திடம் 16 எம்பிக்கள் உள்ளனர். மோடி ஆட்சி அமைக்க நிதிஷ் தனி ஆதரவு கொடுப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இன்று டெல்லிக்கு போகும் முன் சந்திரபாபு நாயுடு பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதி துறை அல்லது பாதுகாப்பு துறையை கேட்டுள்ளார். மேலும் துணை பிரதமர் பதவி, ரயில்வே அல்லது சாலை போக்குவரத்து துறையில் ஒன்று கேட்கவுள்ளதாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் நிதிஷ் குமார் தனக்கு பிரதமர் பதவியை கேட்க நினைப்பார். இல்லையெனில், துணை பிரதமர், மோடி அல்லாத ஒருவர் பிரதமர் என்ற கோரிக்கையை வைப்பார் எனக் கூறப்படுகிறது.