மத்திய அரசின் 5000 கோடி கணக்கு எங்கே ..? கணக்கு கொடுக்குமா தமிழக அரசு -நிர்மலா சீதாராமன் கேள்வி
வரும் மக்களவை தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடாதது பெரும் விமர்சங்களை பெற்றது.
மக்களவை தேர்தல்
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் பெரும் நெருக்கடியில் தேர்தலை சந்திக்கிறது.
எதிரில் இந்தியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதும் தேர்தல் பாத்திரம், மணிப்பூர் விவகாரம் போன்றவை நாடு முழுவதும் பெரும் எதிர்வினையாக பாஜகவிற்கு இருக்கும் நிலையில், 10 ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் என பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இது பெரும் விமர்சனங்களை பெற்றது.
இதனால் தான் போட்டியிடவில்லை
நாட்டின் முக்கிய அமைச்சரே தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நிலையில், பணம் இல்லாத காரணத்தால் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
இந்த சூழலில் இன்று சென்னை பல்லாவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து போது புதிய விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார். தேர்தலில் கட்சி முடிவு செய்தால் தான் போட்டியிட முடியும் என குறிப்பிட்டு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தலில் போட்டியிடலாம் என கூறினார்.
கணக்கு சொல்ல முடியுமா?
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு போதுமான நிதியுதவி அளிக்கவில்லை என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழ்நாட்டுக்கு 900 கோடி நிதியை ஒதுக்கினோம் என்று சுட்டிக்காட்டி, சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 கோடி வழங்கியுள்ளோம் சுட்டிக்காட்டினார்.
நிதியே அளிக்கவில்லை என்பவர்கள் இந்த நிதியை என்ன செய்தார்கள்? என்று வினவி, தமிழக அரசு கணக்கு சொல்ல முடியுமா? என்ற கேள்வியை நிர்மலா சீதாராமன் எழுப்பினார்.