யார் அந்த சார்? அதுதான் ஊருக்கே தெரியுமே.. அண்ணா பல்கலை. விவகாரத்தில் கொதித்த நிர்மலா
அண்ணா பல்கலைக் கழக பெண் பாலியல் விவகாரம் குறித்து நிர்மலா பெரியசாமி பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நிர்மலா பெரியசாமி
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நிர்மலா பெரியசாமி, "இந்த திமுக ஆட்சியில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு இடத்தில் உடை மாற்றும் அறையில் 200 பெண்களை வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த சார் யார்?
மாயவரத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஒரு பெண்ணை கொலை செய்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக் கழகம் முதல் சம்பவம் இல்லை. இப்போது பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் 23 ஆம் தேதி நடந்துள்ளது. அதற்கு முன் 21 ஆம் தேதி அவரது தோழி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதில் கைசெய்யப்பட்ட ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. 20 வழக்குகள் அவர் மீதுள்ளது. எனவே இது முதல்முறை அல்ல என்பது உறுதி. இந்த ஞானசேகரன் பின்னர் இருப்பவர் யார்? அவர், 'எங்க சார் கூடவும் இருக்கவேண்டும்' எனச் சொன்னதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த சார் யார்? அவரை ஊருக்கே தெரிந்து இருக்கிறது. காவல்துறைக்கு மட்டும் தெரியவில்லையா? அந்தப் பகுதியில் உள்ள அமைச்சர் இந்தச் சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை, அமைதியாக இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.