திமுக ஆட்சி அகற்றப்படுவதை வைகோ ரசிப்பார் - அண்ணாமலை
வைகோவை போன்று திமுகவை விமர்சித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது.
குற்றங்கள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக குற்றங்களைப் பதிவு செய்ய காவல் துறை அனுமதி மறுக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். முதலில் கிராமத்தில் நடந்தது தற்போது நகரின் மையப்பகுதியில் நடக்கிறது.
பொங்கல் பரிசு
அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனுப்புகிறது காவல் துறை. மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயலிழந்து விட்டது. பிறகு எப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க முடியும்?
தனியார் பள்ளிகள் ஏன் சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரிடம் தாரை வார்த்து கொடுக்கும் வேலையை செய்ய துவங்கி உள்ளனர்.
தமிழக அரசு கடந்த ஆண்டு 90 ஆயிரம் கோடிகடன் வாங்கியது. இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்கின்றனர்?
வைகோ
எனது சாட்டை அடி போராட்டம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். திமுகவிற்கு தற்போது புரியாது. 2026 ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அவர்களுக்கு புரியும். திமுகவில் இருந்து வைகோ பிரிந்தபோது எதற்காக அக்கட்சியை அவர் எதிர்த்தாரோ தற்போது அதற்காகதான் நாங்களும் எதிர்க்கிறோம்.
வைகோவை போன்று திமுகவை விமர்சித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. 2026ல் திமுக ஆட்சியை அகற்றிக்காட்டுவோம். அதை வைகோ பார்க்க வேண்டும். வைகோ அதை உள்ளுக்குள் ரசிப்பார்" என கூறினார்.