நிக்கோடின் பவுச்களை பயன்படுத்த வேண்டாம்- தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியான அறிவிப்பு..,
"பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) வாங்குதல், விற்றல் மற்றும் உட்கொள்வதற்கு தடுக்கும் வகையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சார்பில் வெளியிடப்படுகிறது.
வாயில் வைக்கும் இவ்வகை நிக்கோடின் பவுச்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பும், தரமும் நிரூபிக்கப்படவில்லை.
இப்படிபட்ட சூழலில் அமேசான், வேர்ல்ட் ஆஃப் நிக்கோடின், தோலக்கியா டொபாகோ, பைடேஸ் போன்ற இணையதளங்கள் மூலம் ஸ்வாக் ஸ்லிம் ஒயிட் மிண்டோ நிக்கோடின் பவுச், டபிள்யூஜி ஒயிட் கோல்ட் ஸ்ட்ராங் மாசிவ் மிண்ட் நிக்கோடின் பவுச், டேஸ் டிராபிகல் மிஸ்ட் நிக்கோடின் பவுச் போன்ற வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உரிய உரிமங்கள் இன்றி ஆன்லைன் வாயிலாக நிக்கோடின் பவுச்களை விற்றதற்காக டெல்லியைச் சேர்ந்த M/s. RR Impex, M/s. Arthian Organic (OPC) Private Limited, குஜராத்தின் M/s Dholakia Tobacco Pvt. Ltd மற்றும் உத்தரப்பிரதேசத்தின் M/s. Daze India ஆகிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்-1940-ன் விதிகளை மீறி, அங்கீகரிக்கப்படாத மருந்துகளைத் தயாரித்து இறக்குமதி செய்து விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உரிய உரிமம் இல்லாமல் இத்தகைய நிக்கோடின் பவுச்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக அமேசான் (M/s. Amazon Seller Services Private Limited, Bengaluru) நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புகைபிடித்தல் அல்லது புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சையாக இத்தகைய நிக்கோடின் பவுச்களைப் பயன்படுத்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவற்றின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இத்தயாரிப்புகளை வாயில் வைத்து உறிஞ்சும்போது நிக்கோடின் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணையதள சந்தை நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்கள் அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்களைத் தயாரிப்பதையோ அல்லது விற்பனை செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்குத் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தை 94458-65400 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.