திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் உட்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாம் உட்பட தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள்
கேரளாவில் அண்மையில் ரூ1,500 கோடி போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
டெல்லியில் நடைபெற்ற குற்ற சம்பவம் தொடர்பாகவும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் ஒருபகுதியாக இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 20 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குற்றச் செயல்கள்
திருச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இம்முகாமில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள். இவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருந்தனர். இவர்களது கோரிக்கையை அண்மையில் தமிழக அரசு ஏற்றது. சோதனையும், விசாரணையும் முடிவடைந்த பின்னரே முழு விபரம் தெரியவரும்.
குறிப்பாக இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கி உள்ள நிலையில் சிறப்பு முகாமில் விசாரணை நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
நடைபெற்ற சோதனையில், 57 செல்போன்கள், 2 ஹார்டு டிஸ்குகள், 8 லேப்டாப்கள், 8 வைபை மோடங்கள், பணபரிவர்த்தனை ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.